சென்னை

சென்னை மெட்ரோ ரெயில் சேவை முதல் பிரிவு விரிவாக்கத்தின் 10 ரெயில்களில் முதல் ரெயில் நேற்று நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னை மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அதன் முதல்  பிரிவின் விரிவாக்கம் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது.  வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான இந்த விரிவாக்கத்துக்கான பணிகள் ரூ.3770 கோடி செலவில் துரிதமாக நடந்துக் கொண்டு உள்ளது.

வரும் ஜூன் மாதம்  பொதுமக்களுக்கு இந்த சேவை அளிக்க உள்ள நிலையில் இந்த சேவைக்கு 10 ரெயில்களின் தேவை உள்ளது. இந்த ரெயில்கள் ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீசிடியில் அமைந்துள்ள ஆல்ஸ்தம் என்னும் தனியார் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.  கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த உற்பத்தியில் முதல் ரெயில் தயாராகி உள்ளது.

இந்த ரெயிலை சென்னையில் இருந்து சென்ற அதிகாரிகள் சோதனை இட்டுள்ளனர்.  இந்த சோதனையில் ரெயில் மழை பெய்தால் ஒழுகுவது,  பிரேக்குகள் இயக்கம், வேகம் மற்றும் மெதுவான இயக்கம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டுள்ளது.   இந்த சோதனையில் தேர்ச்சி பெற்ற முதல் ரெயில் நேற்று மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த ரெயில் ஸ்ரீசிடியில் இருந்து கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனைக்கு கொண்டு வர உள்ளது.   விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பிறகு இந்த ரெயிலில் வெள்ளோட்டம் தொடங்கும் எனவும் இந்த சேவை வரும் ஆண்டு ஜூன் மாதம்  பொதுமக்களுக்கு அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.