நிவர் புயல் எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியுடன் நிறுத்தம்

சென்னை: ​நிவர் புயல் எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயலால், தமிழக கடலோர பகுதி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.

முன் எச்சரிக்கையாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும், விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை இரவு 7 மணியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், மெட்ரோ ரயில் சேவை பகுதி 1 (வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம்) வரை 4.30 மணி முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும்.

அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கடைசி மெட்ரோ ரயில்கள் இரவு 7 மணிக்கு இயக்கப்படுகிறது. இதன்மூலம், மெட்ரோ ரயில் சேவை 8 மணிக்கு முடிகிறது. வானிலை நிலவரத்தை பொறுத்தே மீண்டும் ரயில் சேவை இயக்கப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.