சென்னை:

சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், ரயில் நிலையிங்களில் ஸ்நாக்ஸ் போன்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து வரும் ஜூலை இறுதி அல்லது ஆகஸ்டு மாதத்தில், உணவுப்பொருட்கள் விற்பனை யகம் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்து உள்ளது. முதல் கட்டமாக 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் இது செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், கே.எம்.சி மற்றும் நேரு பூங்கா போன்ற நிலையங்களின்  தலா 10-35 சதுர மீட்டர் அளவிலான உணவு கியோஸ்க்கள் அமைக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த உணவகங்களில், தின்பண்டங்கள் மற்றும் குளிர் பானங்கள் விற்பனை செய்யப்படும் வகையில்,  தானியங்கி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகவும், நந்தனம், சைதாப்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை, அண்ணாசாலை போன்ற இடங்களில், மெட்ரோ ரயில் நிலையத்தின் வெளிப்பகுதியில் திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

தற்போது, ​​மெட்ரோ ரயில் மாடியில் பயணிக்கும் இடங்களில் உள்ள ரயில் நிலையங்களான ஆலந்தூர், வடபழனி, அசோக் நகர் மற்றும் விமான நிலையம் ஆகிய இடங்களில் பிரபலமான உணவு நிறுவனங்களால் உணவகங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆலந்தூரில் பயணிகள் ஏறும், இறங்கும் இரு பகுதிகளிலுல் கடைகள் உள்ளதாகவும், அதுபோல, கோயம்பேட்டிலும், காபி மற்றும் மிட்டாய் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.