சென்னை:

பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும்,  குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி, 94458 02145 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று  குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் 4.23 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.

நாளொன்றுக்கு, தினமும் 214 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கும் வகையில் இத்திட்டங்கள் உருவாக்கப்பட் டுள்ளன.  தற்போது மழை குறைந்து விட்டதால், இந்தாண்டு சராசரியாக, 185 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது.

2018-ல் தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை, 960 மி.மீ., ஆகும். ஆனால், 811 மி.மீ., மழை மட்டுமே பெய்தது. அதேபோல, 2019 ஜனவரி முதல் மே வரை பெய்ய வேண்டிய சராசரி மழை, 108 மி.மீ., ஆகும். ஆனால், 34 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இது, இயல்பு மழையை காட்டிலும், 69 சதவீதம் குறைவாகும்.எனவே, பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

குடிநீர் வாரிய சென்னை தலைமை அலுவலகத்தில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக, சிறப்பு குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் பற்றி, 94458 02145 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.