சென்னை:

குடித்துவிட்டு கார் ஓட்டிய நபருக்கு எழும்பூர் நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்துக்களை குறைக்கும் வகையில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில்  மத்தியஅரசு பாராளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. அதைத் தொடர்ந்து, சட்டத்தை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, ஏற்கனவே  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்பதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. அதுபோல  வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியா விட்டால் ரூ.1000 அபராதமும் (தற்போது ரூ.100), ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.1000 (தற்போது ரூ.100) என்றும் தொடர்ந்து ஹெல்மெட் அணியாதவர்களின் லைசன்ஸ் ரத்து செய்யும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் (தற்போது ரூ.500) என்றும், குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக (ரேஸ்) வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரம் (தற்போது ரூ.500) ஆகவும், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கு  அதிக பட்சமாக ரூ.20 ஆயிரம் என்றும் மேலும் டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதமும் வசூலிக்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாலை விதிகளை மீறினால் ரூ.500 ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000 ம், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000 ம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000 ம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 ம் அபராதமாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நபர்கள் கைது செய்யப்பட்டு எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தோஷ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், லைசென்ஸ் இல்லாமல் குடித்துவிட்டு வாகனம் ஓடிய விஷ்வா என்பவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு உள்ளது.

கோர்ட்டின் அதிரடி அபராதம் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.