சென்னை,

சென்னை, மும்பை, ஐதராபாத்தில் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளதாக விமான நிலையங்களில்  பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு மர்ம நபர் யாரோ மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு,  “மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது, ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தி, வெடி வைத்து தகர்க்க திட்டட்டு இருப்பதாகவும்,  முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து இ-மெயில் வாயிலாகவும் விமானத்தை கடத்த போவதாக தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த மெயிலில்,  6 வாலிபர்கள் விமானத்தை கடத்த போவதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்ருது,  சென்னை, மும்பை , ஐதராபாத் ஆகிய 3 விமான நிலைய அதிகாரிகளுக்கும் , மத்திய உளவுத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து 3 விமான நிலையங்களுக்கும்  உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக  சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.  பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.