சென்னை : 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா வசதி உள்ளது

சென்னை

சென்னையில் உள்ள 136 ரெயில் நிலயங்களில் 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது.

சென்னை நகர ரெயில் நிலையங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன.   கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு பெண் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் ஒரு தலை காதல் காரணமாக கொல்லப்பட்டுள்ளார்.   கடந்த 2016 ஆம் வருடம் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஸ்வாதி என்னும் இளம்பெண் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய சம்பவத்தில்  உண்மை முழுவதும் அறிய முடியாமல் போனதற்கு  அப்போது அங்கு கண்காணிப்பு காமிரா அமைக்கப்படாததே காரணம் என மக்கள் தெரிவித்தனர்.   அதைப் போல தற்போது சேத்துப்பட்டு ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படாமல் உள்ளது.

கடந்த 2011 ஆம் வருடம் சென்னையில் 136 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டது.  ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் இதுவரை 8 இடங்களில் மட்டுமே அவ்வாறு பொருத்தபட்டுள்ளன.    இந்த கண்காணிப்பு காமிரா பொருத்த தேவையான நிதி உதவிகள் வரவில்லை என கூறப்படுகிறது.

தற்போதைய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காமிராக்கள் பொருத்த வேண்டும் என ரெயில்டெல் விரும்புவதாகவும்  அதனால் ஒப்பந்தப் புள்ளிகள் பெற தமாதமாகி உள்ளதாகவும் ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த மாத இறுதிக்குள் இது முடிவு செய்யப்படும் எனவும் இந்த வசதி தென்னக ரெயில்வேயில் 573 நிலையங்களுக்கு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு உள்ளிட்ட சில ரெயில் நிலையங்களில் நிலையத்தின் நிதியைக் கொண்டே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது.    இந்தப்பணி இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கொலை சம்பவத்தை ஒட்டி இந்த பணி சேத்துப்பட்டு, கோடம்பாகம், மற்றும் கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.