ரயிலுக்கு ஆயுதபூஜை! கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிப்பு

மின்சார ரயிலுக்கு ஆயுத பூஜை கொண்டாடியதால் கைது செய்யப்பட்ட சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  திருத்தணி செல்வதற்காக பயணிகளுடன் ரயில், தண்டவாளத்தில் காத்திருந்தது. திடீரென அங்கு வந்த சில இளைஞர்கள், ரயில் முன்பு ஒரு பேனரை கட்டினர். அதில் “பச்சையப்பன் கல்லூரி ஆயுத பூஜை” என்றும், “அன்பு, அராஜகம், வெட்டுக்குத்துட , டதி பாய்ஸ் ஆர் பேக்ட , டஅடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம்” என்றும் அச்சிடப்பட்டிருந்தது.

கிளம்பத்தயாராக இருந்த ரயிலை மறித்து இப்படி பேனர் கட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த ரயில்வே காவலர்கள் அவர்களை விசாரித்தனர்.

தாங்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும், ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆயுதபூஜை நடக்கிற வேளையில் ரயிலுக்கு மட்டும் பூஜை செய்வதில்லை என்பதால் தாங்கள் பூஜை செய்ய வந்தோம் என்றும் தெரிவித்தனர்.

ரயிலை மறித்து இடையூறு செய்த அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.