சென்னை:

நாடாளுமன்ற தேர்தல்  மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் தமிழகத்தில் குவிந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஆங்காங்கே கொடி அணிவகுப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில்  காவலர்களுடன் இணைந்து துணை ராணுவத்தினர் மேளதாளங்களுடனும், துப்பாக்கிகளை கைகளில் ஏந்தியபடியும் அணிவகுப்பு நடத்தினர்.

தேர்தல் பாதுகாப்புக்காக சென்னை மாநகர காவல்துறையில் உள்ள 4 மண்டலங்களுக்கும் தலா 1 கம்பெனி வீதம் துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.  இவர்களில் ஒரு பிரிவினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 806வது கம்பெனி பொறுப்பாளர் ஆய்வாளர் வினு மற்றும் பொறுப்பாய்வாளர் நாகூர் மீரா ஆகியோர்களின் தலைமையில் சுமார் 60 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

இந்த கொடி அணிவகுப்பு அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள  அவ்வை சண்முகம் சாலையில் இருந்து புறப்பட்டு,  லாயிட்ஸ் ரோடு, மிர்சாஹிப் மார்க்கெட், கௌடிய மடம் சாலை வழியாக மீண்டும் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் வந்து முடிவடைந்தது.

தேர்தலையொட்டி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.