சென்னை
சுவாதியை கொலை செய்ததா ராம்குமார் கைது செய்தது குறித்து இன்று காலை  சென்னை காவல்துறை ஆணையர்  ராஜேந்திரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“சுவாதி கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை வைத்து சென்னையின் பல பகுதிகளில்  காவல்துறையினர் விசாரித்தனர். சுவாதி தினசரி பயணிக்கும் இடங்களிலும் விசாரணை நடந்தது. பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து  காவல்துறையினருக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.
பல கோணங்களில் நடந்த விசாரணையினால் குற்றவாளி யார் என்பது தெரியவந்தது. குற்றவாளி பற்றி அடையாளம் தெரிந்ததும், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்துகொண்டு, கொலையாளியை பிடிக்க நெல்லை காவல்துறை உதவியை அணுகினோம்.

கமிஷனர் ராஜேந்திரன்
கமிஷனர் ராஜேந்திரன்

இதையடுத்து, நெல்லை  காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்ய உதவினர். காவல்துறையினர் நெருங்கியபோது ராம்குமார் வீட்டின் பின்னால் மறைந்திருந்தார். போலீசாரை பார்த்ததும் ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
நெல்லை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சென்னையிலிருந்து சிறப்பு விசாரணை குழு நெல்லை சென்று விசாரணையை தொடங்கி இருக்கிறது. புலன் விசாரணைக்கு உதவி செய்த பொதுமக்கள், சுவாதியின் பெற்றோர் மற்றும் மீடியாக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சுவாதி கொலையில் ராம்குமாருக்கு மட்டுமே தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு கூட்டாளிகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.
பொதுமக்கள் அச்சத்தை போக்குவதற்காக சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்துள்ளது” என்று ராஜேந்திரன் தெரிவித்தார்..
பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்வதாக சுவாதியின் தாயார் முதல்வர் தனி பிரிவில் புகார் தெரிவித்திருந்தார். ஆகவே, விசாரணைக்கு சுவாதியின் குடும்பத்தனர் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு ராஜேந்திரன்,  “சுவாதியின் பெற்றோர்கள் புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு   வழங்கினர். சோகத்தில் இருந்தாலும் ஒத்துழைப்பு அளித்த அவர்களுக்கு நன்றி” என்றார்.
சுவாதியை கொன்றவன் பற்றி வலைதளங்களில் பலர் வதந்திகளை பரப்பினர். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து. அப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேட்கப்பட்டதற்கு கமிஷனர் பதில் சொல்லவில்லை.
பிறகு “குற்றவாளி யார் என்பது தெரிவதற்கு முன்பே சமூகவலைதங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். பிரபல காமெடி நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனும் அப்படியொரு கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். அது சர்ச்சைக்கு உள்ளானது. அவர்  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா” என்று கேட்கப்பட்டது.
அதற்கு கமிஷனர் புன்சிரிப்பையே பதிலாக தந்தார். பிறகு.  அடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.