நடிகர் விக்ரம் நடித்த சிசிடிவி கேமரா விழிப்புணர்வு குறும்படம்…..சென்னை போலீஸ் கமிஷனர் வெளியிட்டார்
சென்னை:
சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது குறித்த விழிப்புணர்வு குறும்பட சிடி வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் விசுவாதன் வெளியிட்டார். அதை திரைப்பட நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த விழாவில் போலீஸ் கமிஷனர் விசுவநாதன் பேசுகையில்,‘‘ குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’’ என்றார்.
நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘‘மூன்றாவது கண்’’ என்ற இந்த விழிப்புணர்வு குறும்பட சிடி.யின் முதல் பிரதியை நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால் (தெற்கு), தினகரன் (வடக்கு), ஏ.அருண் (போக்குவரத்து), எம்.டி.கணேசமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.