சென்னை: தண்ணீர் குடிக்க அனுமதிக்காத போலீஸ்! மயங்கி விழுந்த தொழிலாளி!

--

போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்த காவல்துறையினர்,  அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து குடிக்க தண்ணீர் கூட அளிக்க மறுத்ததால் ஒரு தொழிலாளி மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பகுதியில் தென் கொரியாவுக்கு சொந்தமான ஹூண்டாய் கார் தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் எம்எஸ்ஐ நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் 150 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை. இதையடுத்து நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 5-ம் தேதி முதல் நிரந்தர தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப் பொருட்படுத்தாத நிர்வாகம், ஒப்பந்த ஊழியர்களை வைத்து பணிகளைத் தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், சென்னையில் உள்ள தென்கொரிய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க திட்டமிட்டனர். இதற்காக மயிலாப்பூர் கல்யாணி மருத்துவமனை சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் திரண்டனர்.

அப்போது அவர்களை செய்த காவல்துறையினர், லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.

இதற்கிடையே தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, எம்எஸ்ஐ நிர்வாகம் முன்வந்தது. இதனையடுத்து தொழிலாளர் நலத்துறை ஆணையர், காவலில் இருந்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்தார்.

ஆனால் தொழிலாளர்களை மண்டபத்தில் இடைத்த உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் எவரையும் அனுப்ப முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலாளிகளுக்கு மதியம் சாப்பாடு மற்றும் ஆளுக்கு ஒரு தண்ணீர் பாக்கெட்டும் அளித்தனர்.

காவல்துறை அளித்த தண்ணீர் பாக்கெட் போதாமல் அடைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் தவித்தனர். தாகத்தால் வாடிய அவர்கள், தாங்களாவது வெளியே சென்று தண்ணீர் வாங்கிக்கொள்வதாக கேட்டனர். ஆனால் அதற்கும் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தாகம் காரணமாக மிகவும் உடல் சோர்ந்தனர். இதை காவலர்களிடம் தெரிவித்தும் காவலர்கள் தண்ணீர் தர ஏற்பாடு செய்யவில்லை. தண்ணீர் குடிக்க வெளியே தொழிலாளர்களை அனுமதிக்கவும் இல்லை.

இதனிடையே சங்கிலிகருப்பன் என்கிற தொழிலாளி தாகம் தாங்க முடியாமல்,  ரத்த அழுத்தம் அதிகமாகி மயங்கி விழுந்தார்.

அவரை காவலர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட  தொழிலாளர்கள், காவல்துறையின் மனிதாபமற்ற போக்கைக் கண்டித்து ராயபுரம் மருத்துமனை எதிரில் போராட்டம் நடத்த கூடினர்.

அவர்கள், “தொழிலாளர்கள் போராட்டம் என்றால் மண்படத்தில் அடைத்து பெயரளவுக்கு காவல் போடுவதுதான் வழக்கம். ஆனால் எங்களை ஏதோ தீவிரவாதிகள் போல மண்டபத்தைவிட்டு வெளியே வராத அளவுக்கு கடும் காவல் போட்டது காவல்துறை. குடிப்பதற்கு தண்ணீர்கூட தரவில்லை. நாங்கள் வெளியே சென்று தண்ணீர் குடிக்கவும் அனுமதிக்கவில்லை. இதனால் ஒரு தொழிலாளர் மயங்கிவிழும் நிலை ஏற்பட்டது.

அது மட்டுமல்ல.. இது போன்ற போராட்டங்களின்போது மாலை ஆறு மணிக்கு விடுதலை செய்வது வழக்கம். ஆனால் எங்களை அதற்கு மேலும் அடைத்துவைத்தனர். பிறகு நாங்கள் மண்டபத்தின் கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தோம்.

காவல்துறையினரின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்போம்” என்றனர்.