கொரோனா பணி காவலர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரி வழக்கு..

சென்னை:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு முழு உடல் கவசம், முக கவசம், கை உறை, கிருமி நாசினிகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணி, குவாரன்டைன் பகுதி போன்ற இடங்களில்  பணி செய்யும் காவலர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்யக்கோரி  பொது நல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  மனுவில், கொரோனா பரவலை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. இதனால்  கொரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல் துறையினர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால், இதுவரை அங்கு எந்தவித கொரோனா சோதனைகளும் நடத்தப்படவில்லை. எனவே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில்,  அதனால் காவல் துறையினர், சிறைத் துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக பரிசோதனை நடத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு தேவையான முழு உடல் கவசம், முக கவசம், கை உறை, கிருமி நாசினிகள் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்  சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழகஅரசு சார்பில்,  சிறைத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகளுக்கு ஏற்கனவே முக கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.