ராட்சத எண்ணெய் கப்பலை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

சென்னை:

ராட்சத எண்ணெய் கப்பலை துறைமுகத்தின் உள்ளேயே கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.

மிகப் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கப்பலை கையாளும் முதல் துறைமுகாக சென்னை துறைமுகம் மாறியுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து பெரிய துறைமுகங்களிலும் இது நாள் வரை இந்த பெரிய எண்ணெய் கப்பல்கள் துறைமுகப் பகுதிக்கு வெளியே தான் கையாண்டு வந்தன. துறைமுக பகுதிக்கு உள்ளே இத்தகைய கப்பல்கள் சென்று வருவதில் இருந்த சிரமம் தான் இதற்கு காரணம். அதனால் கப்பலை துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி குழாய்கள் மூலம் கப்பலில் இருந்து கச்சா எண்ணெய்யை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து சென்னை துறைமுக கழக தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,‘‘தொழில்நுட்ப ரீதியாக சுமார் ஒரு ஆண்டுகாலமாக இதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கப்பல் மாலுமிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பாதுகாப்பு, எண்ணெய் கசிவு, அவசர உதவி, தீ உள்ளிட்ட அம்சங்களும் ஆராயப்பட்டது’’ என்றார்.

முதல்முறையாக மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பல் (விஎல்சிசி) நியூ டைமண்ட் என்ற எண்ணெய் கப்பல் இன்று ஈராக் பாஸ்ராவில் இருந்து சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் இன்று காலை துறைமுக பகுதியின் பாரதி டாக் 3ல் நிறுத்தப்பட்டது. பாஸ்ராவில் இருந்து வந்த இந்த கப்பலில் இந்தியன் ஆயில் கார்பரேஷன், சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த கப்பலை வரவழைத்துள்ளன.

இதில், ‘‘1.33 லட்சம் டன் பாஸ்ரா இலகு ரக கச்சா எண்ணெய் உள்ளது. தற்போது இது வெள்ளோட்டம் தான். விரைவில் இது போன்ற கப்பல்கள் வழக்கமாக வந்து செல்லும். இதன் மூலம் சிபிசிஎல் நிறுவனத்துக்கு 20 முதல் 30 சதவீதம் வரை வாடகை செலவும் குறையும்’’ என்றும் ரவீந்திரன் தெரிவித்தார்.

‘‘137 ஆண்டு கால வரலாற்றில் இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது’’ என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.