சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் தன்னிச்சையாக விசாரணை கமிஷன் அமைத்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்றுமாலை திடீரென ஆளுநர் மாளிகையில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப்பட்டது. ஆனால், சந்திப்பின் முடிவில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தை ஆளுநர்  தட்டியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை தேவங்கர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மொபைல் போனில் இருந்து  எடுக்கப்பட்ட  ஒலிநாடாவில் ஆளுநருக்கு நெருக்கமானவர்களுடன் தனக்குப் பழக்கமிருப்பதாக நிர்மலா தேவி கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இந்த விவகாரம் குறித்துவிசாரிக்க ஒரு நபர் கமிஷன் ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் தன்னிச்சையாக அமைத்து உத்தரவிட்டார்.

விசாரணை கமிஷன் அமைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், நேற்று மாலை ஆளுநர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மதுரை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் செல்லத்துரையும் ஏன் அமரவைக்கப்பட்டிருந்தார்.

செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு கோபத்துடன் பதில் அளித்த ஆளுநர் பன்வாரிலால்,  இதுபோன்ற கேள்விகளை என்னிடம் கேட்கக்கூடாது என்றார்.

முடிவில்  ஆளுநர் புறப்பட்டபோது, அவரிடம் தி வீக் இதழின் செய்தியாளரான லட்சுமி  சுப்பிரமணியன் “மாநில அரசின் செயல்பாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தி?” என்ற கேள்வியைக் கேட்டார்.

அதற்கு ஆளுனர், “பெரும் திருப்தி” என்று பதிலளித்தார். அப்படியானால், “பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் மட்டும் திருப்தியில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டபோது, அவர் பத்திரிகையாளர்  லட்சுமி சுப்பிரமணியத்தின் கன்னத்தை தட்டிவிட்டு சிரித்தார்.

இதனால் கோபமடைந்த லட்சுமி சுப்பிரமணியன், தனது ட்விட்டரில் எழுதியிருக்கும் குறிப்பில், “உங்களுடைய செயல்பாட்டால் நான் மிகுந்த கோபமடைந்திருக்கிறேன் திரு. பன்வாரிலால் புரோஹித். உங்களுடைய செயல்பாடு ஒரு பாராட்டாகவோ, தாத்தா என்ற முறையிலோ இருந்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அது தவறானது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் செயலுக்கு பல்வேறு ஊடகத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றம், ஆளுநர் இந்த விவகாரத்துக்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் அதன் துணைச்செயலாளர் பாரதி தமிழன் விடுத்துள்ள அறிக்கையில், ஆளுநர் பன்வாரிலாலின் செயல் கண்டனத்துக்கு உரியது என்றும்,  கவர்னரின் செயல் ஐபிசி செக்சன் 356 படி குற்றமாகும். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால்,  இனி வரும் காலங்களில் ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்போம் என்றும் கூறி உள்ளார்.