சென்னை மந்தைவெளி ‘இருபது ரூபாய் டாக்டர்’ ஜெகன்மோகன் மறைவு

சென்னையில், 20 ரூபாய் மட்டும் கட்டணம் பெற்று மருத்துவ சேவையாற்றி வந்த மருத்துவர் ஜெகன்மோகன் மறைந்தார்.  அவருக்கு வயது 70.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாவூரை சேர்ந்தவர் ஜெகன்மோகன். இவர் சிறுவயதாக இருக்கும்போதே இவரது குடும்பம் சென்னையில் குடியேறியது. பள்ளி படிப்பை தொடர்ந்து, தனது கல்லூரி படிப்பை, பச்சையப்பன் கல்லூரியில், பிஎஸ்சி படித்தார். பிறகு, மும்பையில், பிரபல மருந்து விற்பனை கம்பெனியொன்றில் இணந்து, 1960ஆம் ஆண்டுகளிலேயே, 2 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றார்.

தனது நேர்மையை அதிகாரிகள் சந்தேகித்ததால், அந்தப் பணியைவிட்டு விலகினார். டாக்டர் ஜெகன்மோகன்,  அப்போதைய முதல்வர் அண்ணாவை சந்தித்து மருத்துவம் படிக்க இடம் கோரினார். அவரும் டம் ஒதுக்கீடு செய்து தர, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து, படித்து முடித்து மருத்துவரானார்.

தனது மனைவி சந்திரா பெயரில் 1975ஆம் வருடம் சென்னை மந்தைவெளியில், தனது இல்லத்திலேயே, கிளினிக் ஆரம்பித்த டாக்டர் ஜெகன்மோகன், வெறும் ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளிக்கத் துவங்கினார்.

தன் க்ளினிக்கில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சம்பளம் அளிக்கவும், மின்சார கட்டணம் செலுத்தவும் சிரமம் ஏற்பட்டதால் மெல்ல மெல்ல உயர்த்தினார். ஆனால் இந்த நாற்பத்தி மூன்று வருடங்களில் அவரது கட்டணம் வெறும் இருபது ரூபாய் அளவுக்கே உயர்ந்தது.

பலநூறு ரூபாய் கட்டணம் பெறும் மருத்துவர்களிடையே, இப்படி குறைந்த கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதால் இங்கு வந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது.

தினமும் காலையில் 150 பேர், மாலையில் 150 பேர் என சுமார் 300 பேருக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பல முக்கிய தலைவர்களுடன் நேரடி அறிமுகம் உள்ளவர்.  ஆனாலும் மிக எளிய வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வரையில் நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ஜெகன்மோகன், உடல்நலம் குன்றியதால், அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக பேசிக் கொண்டிருந்த நிலையில், புதன்கிழமை காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

மருத்துவரின் இறப்பு குறித்து சோகத்தை பகிர்ந்து கொண்ட அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் எவ்வித நோயையும் எளிதில் குணப்படுத்துவார். ஏழை நோயாளிகளுக்கு பல முறை, சொந்த பணத்திலும் சிகிச்சை அளித்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்