எட்டு வழிச்சாலை விவகாரம்: தேர்தலுக்கு பிறகு மாற்றிப்பேசும் எடப்பாடி…. மக்கள் கொந்தளிப்பு

சென்னை:

சென்னை சேலம் எட்டுவழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, உயர்நீதி மன்ற உத்தரவை தமிழக அரசு பின்பற்றும் என்றும், மக்கள் விரும்பாத எந்தவொரு செயலையும் அரசு செய்யாது என்று வாக்குறுதி அளித்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது, சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைவது உறுதி என்று கூறி உள்ளார். இது 5 மாவட்ட மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில்  8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்தன. இந்த சாலை அமைவதால், 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள், விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால்,  7,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; 10,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் அத்திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ஆனால், மாநில அரசு மக்களின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணியில் காவல்துறையினர் உதவியுடன் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள்  பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து, 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பல வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணையின் போது, 8 வழிச்சாலை திட்டத்துக்காக  500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. வழக்கின் இறுதியில், நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை  சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், ஆளும் கட்சியும், 8வழிச்சசாலை அமையாது, உயர்நீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து வோம் என முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரசாரத்தின்போது பேசி வந்தார்.

ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரி 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறினார். தற்போது தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நேற்று  செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பபடும் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடியின் இந்த அறிவிப்பு 5 மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை  8வழிச்சாலை திட்டம் செயல்படுத்த மாட்டோம் என்று கூறி வாக்கு சேகரித்த எடப்பாடி, இன்று 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மாற்றி பேசியிருப்பது  மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed