சென்னை:

சென்னை-சேலம் இடையிலான பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சிறப்பு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

சென்னை-சேலம் இடையே பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் உள்ள 100 ஹெக்டேர் அளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படவுள்ளது. ஆரணி, போளூர், செங்கம், சாத்தனூர், திருவண்ணாமலை, தீர்த்தமலை, ஹாரூர், வடக்கு ஷேவராய் சரகம் ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகள் அடங்கிய 16 வனப்ப குதிகள் அழிக்கப்படவுள்ளது.

செங்கல்பட்டு வனச்சரகம், சாத்தனூரில் பிஞ்சூர், திருவண்ணாமலையில் சோராகொளத்தூர், ஆரணியில் நம்பேடு, போளூரில் அலியாளாமங்கலம் மற்றும் முன்னார்மங்கலம், செங்கம் சரகத்தில் ஆனந்தவாடி மற்றும் ராவண்டவாடி, தீர்த்தமலை வனச்சரகத்தில் பூவம்பட்டி மற்றும் பூவம்பட்டி விஸ்தரிப்பு, தர்மபுரி மாவட்டம் ஹாரூர் சரகத்தில் நானாங்கனூர், பள்ளிப்பட்டி விஸ்தரிப்பு, சேலம் மாவட்டம் ஷேவராய் வடக்கு சரகத்தில் மஞ்சவாடி காத் மற்றும் ஜருகுமலை ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படவுள்ளது.

வனத்துறையிடம் இருந்து விரைந்து அனுமதி பெறும் வகையில், அத்துறைக்கு அருகில் உள்ள மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்குமாறு மாநில அரசை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக வடக்கு மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு இந்த வனம் தான் முக்கிய பகுதியாக விளங் குகிறது. நூற்றுக்கணக்கான விலங்குகள், பறவைகள், இதர உயிரினங்களின் புகழிடமாக உள்ளது. இங்கு அழிக்கப்படும் மரங்களின் எண்ணிக்கை, சுற்றுசூழல் பாதிப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இளந்தளிர் அமைப்பின் தலைவர் பிரகாஷ் கூறுகையில், ‘‘10 ஹெக்டேர் வன பரப்பு அழிக்கப்பட்டாலே ஒட்டு மொத்த உயிரி பன்முகத்தன்மை முறையே அழிந்துவிடும். 100 ஹெக்டேர் வனப்பகுதியை அழிக்கும் திட்டத்தால் திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த சுற்றுசூழலும் பாதித்துவிடும்.

மரங்கள் வெட்டப்படுவதால் பறவைகள், இதர உயிரினங்களும் தங்களது வாழ்விடத்தை இழந்துவிடும். சாலை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னை எழும்போது உயர் பாலங்கள் அமைக்கும் நடைமுறை சென்னை போன்ற நகரங்களில் பின்பற்றப்படுகிறது. ஏன் இத்தகைய திட்டங்களை இங்கு முயற்சிக்க கூடாது?’’ என்றார்.

சென்னை-சேலம் இடையிலான பயண தூரத்தை 57 கி.மீ., குறைக்கும் வகையில் ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் 274.3 கி.மீ., தொலைவிலான பசுமை விரைவு சாலை திட்டத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 5 மாவட்டங்களில் மொத்தம் 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ எத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது என்பதை கணக்கெ டுக்கும் பணி நடக்கிறது’’ என்றனர். இதை தவிர வேறு கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.