சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை: தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சாவூர்:

சென்னை சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8வழி எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை சேலம் இடையே 10ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்படும் மத்திய மாநில அரசுகள் அறிவித்து அதற்காக நிலம் கையப்படுத்தும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. 8 மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த பசுமைவழிச் சாலை அமைக்கப்படுவதால்,  மக்களின் விவசாய பகுதிகள் மட்டுமின்றி சுமார் 100 ஹெக்டேர் வனப்பகுதி, மலைகளும்  அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

அதன் கரணமாக சாலை அமைக்க அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ, விரைவு சாலை கண்டிப்பாக அமைந்தே தீரும் என்று பிடிவாதமாக, எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்து, போராட்டத்தை நசுக்கி வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களுக்கு எதிரான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

சுமார்  200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.