சென்னை சேலம் பசுமை வழிச்சாலை: நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் “இடைக்கால தடை” ..!

டில்லி:

சென்னை  முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமை விரைவுசாலைக்காக  நிலம்  கையகப்படுத்த சென்னை உயர்நீதி மன்றம்  தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து  உள்ளது.

சென்னை – சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதிக்க சென்னை  உயர்நீதிமன்றம் ஏற்கனவே மறுத்த நிலையில், தற்போது நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில்  8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த சாலை அமைவதால், 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள், விளை நிலங்கள், தோப்புகள் அழிக்கப்பட இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சாலை அமையும் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் விளை நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்  . ஆனால் மாநில அரசு  இவற்றை கண்டு கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்பட பலர் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சென்னை சேலம் 8 வழிச்சாலைக்காக  இதுவரை  500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இதற்கு, தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து   தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையத்தில் தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் ஆராய்ந்தனர். அப்போது தமிழக அரசுக்கு,  நிலத்தை வற்புறுத்தி கையகப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில் ஏன் வற்புறுத்தி கையகப்படுத்துகிறீர்கள் என்றும்,  இப்படியே தொடருமானால் ஒட்டு மொத்த திட்டத்திற்கும் தடை விதிக்க நேரிடும்  என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து,   மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சுற்றுச் சூழல் ஆய்வு எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர் வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்வதாக கூறிய நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஅரசு சார்பில்,  சென்னை – சேலம் இடையேயான எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2 வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்த  திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பரிசீலித்து வருவதால் இது போன்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது  இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படாத நிலையில் , மரங்களை மத்திய அரசு சார்பில் வெட்டவில்லை என்றும் தனிநபர்கள் அரசின் பெயரை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , மரங்களை வெட்டிய புகாரில் சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அதையடுத்து சென்னை  முதல் சேலம் வரையிலான எட்டு வழி சாலைக்காக  நிலம்  கையகப் படுத்தும் தமிழக அரசு உத்தரவுக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கார்ட்டூன் கேலரி