சென்னை

மாமண்டூர் அருகே சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைய உள்ள்தாக தகவல்கள் வந்துள்ளன.

சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.   தற்போதுள்ள இடத்தில் இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த இயலாத நிலை உள்ளது.   அதை ஒட்டி இரண்டாம் விமான நிலையத்தை அமைக்க விமானப் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

பிரபல கட்டுமான நிறுவனமான கே ஜி எஸ் டெவலப்பர்ஸ் சென்னையின் இரண்டாம் விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.    இந்த விமான நிலையத்தை இந்நிறுவனம் மாமண்டூர் அருகே 4500 ஏக்கரில் அமைக்க திட்டமிட்டுள்ளது.   மாநில அரசின் அனுமதி கிடைத்த உடன் இந்த பணிகள் தொடங்கப்படும் என அந்நிறுவன உரிமையாளர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விமான போக்குவரத்து ஆணைய அதிகாரி ஒருவர், “சென்னைக்கு தெற்கே சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள மாமண்டூர் அருகே இரண்டாம் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த விமான நிலையத்துக்கான 3500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்துக்காக விமான போக்குவரத்து ஆணையம் சுமார் 4500 கோடி முதலீடு செய்ய உள்ளது.   மாநில அரசு அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும்.  வரும் 2022-23 ஆம் வருடம் இந்த விமான நிலையம் தொடங்கப்படலாம்.   இந்த விமான நிலையத்தின் மூலம் சுமர் 2 கோடி பயணிகளை கையாள முடியும்” என தெரிவித்துள்ளார்.