டெல்லி அணிக்கு வெற்றி இலக்கு 180 ரன்கள் – சென்னையை இரண்டாம் முறையாக வெல்லுமா?

ஷார்ஜா: டெல்லி அணியின் வெற்றிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது சென்னை அணி.

இந்தமுறையும் டாஸ் வென்ற சென்னை அணி, யோசிக்காமல் பேட்டிங் தேர்வு செய்தது. இப்போதெல்லாம், ஐபிஎல் தொடரில் எந்த அணி டாஸ் வென்றாலும், முதலில் பேட்டிங்கையே தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தமுறை துவக்க வீரராக களமிறங்கிய சாம் கர்ரன் டக் அவுட் ஆனார். அதேசமயம் டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் ஓரளவு ஆடினார்கள். டூ பிளசிஸ் 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும், ஷேன் வாட்சன் 28 பந்துகளில் 36 ரன்களையும் அடித்தனர்.

அதேசமயம், அம்பாதி ராயுடு மற்றும் ஜடேஜாவின் ஆட்டம்தான் சென்னையை நல்ல ஸ்கோர் எட்ட உதவியது எனலாம்.

ராயுடு 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 45 ரன்களையும், ஜடேஜா 13 பந்துகளில் 4 சிக்ஸர்களை விளாசி 33 ரன்களையும் விளாசினார். கேப்டன் தோனி வழக்கம்போல் 5 பந்துகளில் 3 ரன்களை அடித்து வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை அடித்தது சென்ன‍ை அணி.