அபுதாபி: பஞ்சாப் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

பின்னர் சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளை சந்தித்து 62 ரன்களை அடித்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

பாஃப் டூ பிளசிஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 48 ரன்களை அடித்தார். அம்பதி ராயுடு 30 பந்துகளில் 30 ரன்களை அடித்து நாட்-அவுட்டாக நின்றார்.

கூடுதல் ரன்களாக 14 ரன்களை வழங்கியது பஞ்சாப் அணி. இறுதியில் 18.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்களை அடித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.

இந்த வெற்றியால் சென்னை அணிக்கு பெரிய லாபமில்லைதான். அதேசமயம், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மொத்தம் 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் பின்தங்கியுள்ளது சென்னை அணி.

இத்தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனலாம். தனது கடைசி 2 போட்டிகளில் ராஜஸ்தான் & சென்னை அணிகளை பஞ்சாப் வென்றிருந்தால், பிளே-ஆஃப் வாய்ப்பை கட்டாயம் பெற்றிருக்கும் பஞ்சாப் அணி. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை கோட்டைவிட்டுவிட்டது அந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதாக வெல்ல வேண்டிய ஆட்டங்களை தேவையில்லாமல் தோற்ற சென்னை அணி, தற்போது தான் ஆடிய கடைசி 3 ஆட்டங்களையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக லீக் சுற்றோடு வெளியேறுகிறது சென்னை அணி.