சென்னை:

மீன் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றுவதில் சென்னையை அடிப்படையாக கொண்ட சுய உதவி குழு மற்றும் நம்பிக்கை மீன் விவசாயிகள் குழு., தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சிறந்த மீன்பிடி சுய உதவிக்குழு விருதை வென்றுள்ளதாக மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, மீன் கழிவுகளை மதிப்பு மிக்க பயனுள்ள பொருட்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக ஏற்றுக் கொண்டதற்காக சென்னையை அடிப்படையாகக் கொண்ட சுய உதவிக்குழு மற்றும் நம்பிக்கை மீன் விவசாயிகள் குழு இந்த விருதை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், “கழிவுகளிலிருந்து செல்வம்” என்ற முன் முயற்சியில் இந்த தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியை ஏற்றுக் கொண்ட குழுக்கள் சந்தைகளிலிருந்து மீன் கழிவுகளையும், மீன் பதப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து மீன் வெட்டும் கழிவுகளையும் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
நம்பிக்கை மீன் விவசாயிகள் குழு மற்றும் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு சுய உதவிக்குழு 16,345 கிலோ மதிப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்து, ஆண்டுக்கு 1.68 மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளனர்.  இந்த குழுவில் உள்ள ஏழு மீனவர்களில், 4 பேர் பெண்களாவர், இவர்கள் இக்கட்டான கொரோனா காலகட்டத்திலும், இதன் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர்.
இதைப்பற்றி மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனரான கே கே விஜயன் தெரிவித்துள்ளதாவது: இந்த சிறந்த தொழில்நுட்பமானது மீன் சந்தைகளை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், நாடுமுழுவதும் பலருக்கு வாழ்வாதாரத்தை வழங்குவதிலும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்க்காகவும் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
விருதை வென்ற சென்னை சுய உதவிக் குழுவின் தலைவரான டி. கென்னட் ராஜ் தெரிவித்துள்ளதாவது: இந்த விருதைப் பெறுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்… இது எங்கள் உழைப்பிற்க்கான அங்கிகாரம் என்று நான் நம்புகிறேன், மேலும் உற்பத்தியை உயர்த்துவதற்கான மகத்தான நம்பிக்கையை இந்த விருது எங்களுக்கு அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன் விருது வழங்கும் விழா புதுடில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட மத்திய மீன்வளத்துறை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான பிரதாப் சந்திர சாரங்கி இந்த விருதுகளை வழங்கினார்.