சென்னையில் சொத்துக்காக தாயைக் கொன்ற மகன்

--

சொத்துக்காக பெற்ற தாயையே மகன் கொன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்குக்கடற்கரைச்சாலை பாலவாக்கம் மணியம்மை தெருவில் வசித்தவர் ராணி(வயது 65). இவரது கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு பெர்னார்ட் (எ) பர்னபாஸ் (வயது 40) என்ற மகன் இருக்கிறார்.

ராணியின் கணவரின் மறைவுக்குப் பின் அவரது சொத்துகள் ராணியின் பெயரிலேயே இருந்தது. அதே நேரம், மகன் பர்னபாஸ் தாயை பராமரிக்கவில்லை. தனியாக தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

அதே நேரம் நிலையான வருமானம் இல்லாத பர்னபாஸ், அவ்வப்போது தாயார் ராணியிடம்  செலவுக்கு பணம் வாங்கிச் செல்வார்.

இந்த நிலையில் தந்தையின் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி தாயாரிடம் பர்னபாஸ் வற்புறுத்தினார். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவரும் பர்னபால் சொத்தை வீணாக்கிவிடுவார் என்றும், இப்போதே தன்னை கவனிக்காத மகன் சொத்தும் இல்லை என்றால் பொருட்படுத்தவேமாட்டார் என்றும் தாயார் ராணி  நம்பினார். ஆகவே  தான் உயிருடன் இருக்கும்வரை சொத்தை மாற்றித்தர முடியாது என்று ராணி மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் தாயார் ராணியின் வீட்டுக்கு வந்து சொத்தை மாற்றித்தரும்படி பர்னபாஸ் பிரச்சினை செய்தார். அப்போது இருவருக்குமிடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஆனால் தான் உயிரோடு இருக்கும்வரை சொத்தை மாற்றித்தர முடியாது என்று தாயார் ராணி மீண்டும் சொல்லியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன் பர்னபாஸ் அருகிலிருந்த கட்டையால் தாய் ராணியின் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொன்றார். பிறகு அருகில் கொசுவுக்காக மூட்டப்பட்டிருந்த நெருப்பில் உடல் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

தாய்க்கும் மகனுக்கு நடக்கும் சண்டையை கவனித்த அக்கம் பக்கத்தினர் பிறகு சத்தமே இல்லாததா ல், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கு ராணி பிணமாக இருப்பதைக் கண்டனர். சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய மகன் பர்னபாஸை தேடிப்பிடித்து கைது செய்தனர். சொத்துக்காக பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.