கொரோனா பரவல் தீவிரமான நிலையிலும் இயல்புநிலைக்கு திரும்பி வரும் சென்னை…

சென்னை:

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமான நிலையிலும், தமிழகஅரசு கடைகளை திறக்க அனுமதி வழங்கியதுடன் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இதனால், சென்னை மெல்ல மெல்ல தனது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. அதேவேளையில் ஏராளமானனோர் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்துச் செல்வதும் அதிகரித்து உள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவல்  தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர்  2வது கட்டமாக ஊரடங்கு  மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  ஆனால், தற்போதும்  சென்னை உள்பட  பல மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் குறையாததால்,  ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் பல பணிகளுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

சென்னைல் ஒருபுறம் கொரோனாவின் தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், மற்றொருபுரம் அரசு அறிவித்துள்ள தளவுகள் காரணமாக ஏராளமான கடைகள் திறக்கப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். பல இடங்களில் அனைத்து வகையான தனிக்கடைகளும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் எப்போதும்போல தங்களது ஷாப்பிங்கை தொடர்ந்தனர்.

சென்னை அண்ணா சாலை உள்பட நகர் முழுவதும் வாகனங்கள் இயக்கம் அதிகமாகவே காணப்பட்டது. புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, திநகர், வேளச்சேரி போன்ற இடங்களில் வணிக நிறுவனங்கள் திறந்திருந்தன.  ஆட்டோக்களும் பல இடங்களில் சவாரி சென்றதை காணமுடிந்தது. பைப்பில் ஒருவர்மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலான பைக்குகளில் 2 பேர் முதல் 3 பேர் வரை பயணித்தை பார்க்க முடிந்தது.

சென்னையில் போக்குவரத்து விளக்குகள் வேலை செய்தன. சில இடங்களில் காவலர்களும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகளை திறக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். மீறி திறக்கப்பட்ட கடைகளும் உடனே அடைக்கப்பட்டன.

சாலையோரங்களில் எப்போதும்போல தள்ளுவண்டிகளும்,, மெக்கானிக் ஷெட்டுகளும் களைகட்டி காணப்பட்டது.   கடந்த ஒரு மாதமாக  வாகனங்கள் இயக்கப்படாததால், பேட்டரிடவுன் ஆன பல வாகன ஓட்டிகள் மெக்கானிக் கடைகளில் குவிந்திருந்ததை காணமுடந்தது.

அதுபோல செல்போன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. லாக்டவுன் காலத்தில் போனின் பயன்பாடு மற்றும் சிறுசிறுச் சச்சரவுகளால் தூக்கி வீசப்பட்டு உடைந்த போன்களை சரி செய்வது போன்றவற்றுக்காக பலர் கியூவில் இன்றிருந்த காட்சிகளும் காணப்பட்டன.

இந்த நிலையில் எப்போதும்போல சென்னையின் எல்லைப்பகுதியான செங்கல்பட்டு டோல் கேட்டில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பலர் சென்னையில் பரவி வரும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் தங்களது சொந்த ஊர்களை நோக்கிச் செல்ல வாகனங்களால் அணிவகுத்து நின்றனர். அவர்களை காவல்துறையினர் செக் செய்து பாஸ் உள்ளவர்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கினர்.

மொத்தத்தில் சென்னை தனது இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. ஓரிரு நாளில் பழைய நிலையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.