அக்டோபர் 7ந்தேதி தொடங்குகிறது சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவை.. தெற்கு ரயில்வே

சென்னை:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 7 முதல் மீண்டும் சேவையை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும்  கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ரயில்சேவை முடங்கியுள்ளது. இடையிடையே புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷராமிக் சிறப்பு ரெயில்களும், சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் பொதுமுடக்கத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில், செப்டம்பர் மாதம்  7ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின் றன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால், புறநகர் ரயில் சேவை இதுவரை தொடங்கப்படாமல் இருந்து வந்தது.  மாநில அரசுகள் விரும்பினால், புறநகர் ரயில் சேவைகளை இயக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்றும், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ்  கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  அக்டோபர் 7-ம் தேதி முதல் சென்னையில், புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக 300 ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவம், புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100 % பணியாளர்களை 1-ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புறநகர் ரெயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் தினசரி 450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.