சென்னை: இந்திய அணி வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்று எழுந்துள்ள யோசனைகளுக்கு சென்னை அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தற்போது, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஐபிஎல் தொடர். இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்வாகம் மற்றும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் போன்றோர், இந்திய வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஐபிஎல் தொடரை இந்தமுறை நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்திருந்தனர்.
ஆனால், இந்த யோசனைக்கு சென்னை அணி சார்பில் வலுவாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடத்தப்பட்டால், ஏற்கனவே பிசிசிஐ அமைப்பால் நடத்தப்படும் உள்ளூர் டி-20‍ தொடரான சையது முஷ்டாக் அலி டிராபி போட்டிகள் போல் ஆகிவிடும் ஐபிஎல் என்று அந்த தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தாண்டில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் ரத்தாகும்பட்சத்தில், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வரை நஷ்டமாகும் என்று கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.