மின்வாரியம், நெடுஞ்சாலை துறைகள் இடையே மோதல்: சென்னை-தடா விரிவாக்க பணிகள் பாதிப்பு

சென்னை: சென்னை, தடா சாலை விரிவாக்கத்தின் போது மின்மாற்றிகளை இட மாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையான எண் 5ல் சென்னை முதல் தடா வரை 6 வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. இந்த 6 வழிச்சாலை விரிவாக்க 2ம் கட்ட பணிகளுக்கு, 295 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

2018ம் ஆண்டு மார்ச் முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

இது குறித்து, ஒருவர் மேல் ஒருவர் என இரண்டு துறைகளும் பழி போட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணைய துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது:

41 மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் இடம்மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த பணிகளில் மின் வாரியம் தாமதம் காட்டுகிறது. அதற்கான திட்ட மதிப்பீடுகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அளிக்கவில்லை.

ஆகையால், சாலை விரிவாக்க திட்டத்துக்கான மதிப்பீடு அதிகரிக்கிறது. அவர்கள் அதை அளித்தால் தான் ஒப்பந்ததாரர்கள் பணிகளை முடிக்க ஏதுவாக இருக்கும். இது தொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் தலைமை செயலாளரிடமும் பலமுறை தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று கூறினர்.

ஆனால், சாலை விரிவாக்க பணிகள் ஆரம்பிக்கும் 18 மாதங்களுக்கு முன்பே கணக்கெடுக்கப்பட்ட 104 மின்கம்பங்களில் 63 மாற்றப்பட்டுவிட்டன என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்து இருக்கிறது.