ஒருவழியாக முதல் வெற்றியை அடைந்தது சென்னை கால்பந்து அணி!

சென்னை: உள்நாட்டு அளவிலான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, நடப்புத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து மோசமான விமர்சனத்தை தவிர்த்துள்ளது.

தனது சொந்த மண்ணில், ஐதராபாத் அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது சென்னை அணி.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் இப்போது நடைபெறுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்க‍ேற்கும் இத்தொடரில் சென்னை கால்பந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததானது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ஐதராபாத்திற்கு எதிரான போட்டியின் தொடக்கம் முதலே, பந்து சென்னை அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அனால் என்ன சுவாரஸ்யம் என்றால், ஸ்டாப்பேஜ் நேரம் வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. அனைத்து முயற்சிகளுமே வீண்.

இறுதியாக ஸ்டாப்பேஜ் நேரத்தில் சென்னை அணி 2 கோல்களும், ஐதராபாத் அணி 1 கோலும் அடிக்க, வெற்றியை ருசித்தது சென்னை அணி.

இதன்மூலம், இத்தொடரில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துவந்த சென்னை அணி, தற்போது முதல் வெற்றியைப் பெற்று தன் மீதான விமர்சனங்களுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.