இன்ஸ்டாகிராமில் பாதுகாப்பு குறை: கண்டுபிடித்த தமிழக இளைஞனுக்கு ரூ.20லட்சம் பரிசு

--

மூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள குறையை கண்டுபிடித்து கூறிய தமிழக இளைஞனுக்கு 30ஆயிரம் டாலர்  (ரூ.20லட்சம்) பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.

சென்னையை சேர்ந்தவர் தொழில்நுட்ப பொறியாளர் லக்ஷ்மண் முத்தையா. இவர் இணைய தள தொழில்நுட்பங்களில் ஆர்வம் மிக்கவர். இணையதளங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை ஆராய்வதில் கெட்டிக்காரர்.

இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் குறித்தும், அதை உபயோகப் படுத்தும் பயனர்களின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதில், பாதுகாப்பு குறைபாடு இருந்தை அறிந்ததும், இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கடர்களால் திருடப்பட வாய்ப்பு இருப்பதை தெரிந்து, அதுகுறித்து, இன்ஸ்டாக் கிராம் நிறுவனத்துக்கு சுட்டிக்காட்டினார்.

இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பயனாளர்கள் பாஸ்வேர்டு மாற்றுவதற்கு தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் அவரது கணக்கை ஹேக் செயலாம் என்பதை லக்ஷ்மண் முத்தையா கண்டுபிடித்து சுட்டிக்காட்டி உள்ளார். இவரது குற்றச்சாட்டை ஆராய்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், அதை ஒப்புக்கொண்டதோடு, பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்துள்ளனர்.

அதையடுத்து,  முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு 30ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 20.56 லட்சம்)  பரிசாக அளித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய முத்தையா, “பேஸ்புக் பாதுகாப்புக் குழுவிற்கு மெயில் அனுப்பியதாக கூறும் முத்தையா, தனது கூற்றை அவர்கள் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தான் தொடர்ந்து, குறை தொடர்பாக  சில மின்னஞ்சல்கள் மற்றும் வீடியோ சான்றுகள் அனுப்பியதாகவும், அதன்பிறகே அந்த நிறுவனம், பாதுகாப்பு குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.