சென்னை: பிரபல மாற்றுத்திறனாளி வழிப்பறி கொள்ளையன் தப்பியோட்டம்!

பிரபல  மாற்றுத்திறனாளி வழிப்பறி கொள்ளையன் பல்சர் பாபு காவலர் பிடியில் இருந்து தப்பியோடிவிட்டார்.

சென்னை காசிமேடு, பவர் குப்பம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பல்சர் பாபு. கால் ஊனமுற்றவரான இவர், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பார். கால் ஊனமுற்றவர் என்பதால் பலரும் மனமிரங்கி லிப்ட் கொடுப்பார்கள்.

பல்சர் பாபு ( கோப்பு படம்)

வாகனம் சென்றுகொண்டிருக்கும் போதே, பின்னால் அமர்ந்தபடி, கத்திமுனையில் மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிவிடுவார் பல்சர் பாபு. த்து இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே முறையில், கடந்த வருடம் நவம்பர் மாத வாக்கில் சென்னை  மயிலாப்பூரில் இளைஞர் ஒருவரிடம் பல்சர் பாபு வழிப்பறி செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிசிடிவி காமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய தனிப்படை காவலர்கள் பல்சர் பாபுவை வலைவீசி தேடினர்.  ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையில் பதுங்கியிருந்த பல்சர் பாபுவை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 27 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புழல் சிறையில் பல்சர் பாபு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று தனக்கு உடல் நிலை சரியில்லை என்று சிறைக் காவலர்களிடம் பல்சர் பாபு தெரிவித்தார். இதையடுத்து  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை காவலர்கள் அழைத்துவந்தனர்.

அங்கு காவலர்களை ஏமாற்றிவிட்டு பல்சர்பாபு தப்பிவிட்டார். அவரை காவலர்கள் மீண்டும் வலைவீசி தேடிவருகிறார்கள்.