சென்னை: மந்திரவாதி கொடூர கொலை

மந்திரவாதி  ஒருவரா் எரிதிரவம் ஊற்றி கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சினஸ் முதல் தெருவில் வசித்து வந்தவர் சையத் பஸ்ருதின் என்கிற பாபு பாய். வயது 62.

இஸ்லாமியரான இவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் மந்திரம் ஓதும் மோதினாராக தொழில் செய்து வந்தார். இதற்காக அங்கு அவருக்கு தனி இடம் இருந்தது.

பிரச்சினைகளோடு வருபவர்களுக்கு பாத்தியா (இஸ்லாமியர் நம்பும் மந்திரம்) ஓதி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பது இவரது தொழில். மேலும் எதிர்காலம் குறித்து குறி சொல்லும் தொழிலையும் செய்து வந்தார்.

இவரை நாடி இஸ்லாமியர்கள் பெருமளவில் வந்தாலும், இதர மதத்தினரும் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சையத் பஸ்ரூதின் திருவல்லிக்கேணியில் உள்ள தனது இடத்தில் சூராக்களை ஓதியபடி இருந்தார். அப்போது அவரைப்பார்க்க பர்தா அணிந்த ஒரு பெண் வந்தார். அவர் சையத் பஸ்ரூதினை நோக்கி திடீரென்று  எரி திரவம் ஒன்றை   ஊற்றி தீ வைத்தார். சையத் பஸ்ருத்தீன் சுதாரிப்பதற்குள் அவரது தலை, முகம் முழுதும் தீப்பற்றியது.

இந்த நிலையில் அந்த பர்தா பெண் தப்பியோடிவிட்டார். பஸ்ருத்தீனின் அலறல்   கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  ஓடி வந்து தீயை அணைத்தனர்.  அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சையத் பஸ்ருதீன் மரணமடைந்தார்.

சையத் பஸ்ருத்தீன் எரித்து கொல்லப்பட்ட  தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர்கள், விசாரணை நடத்தினர்.

பர்தா அணிந்து வந்து தீ வைத்த நபர் பெண்தானா அல்லது பர்தா அணிந்து வந்த ஆணா என்கிற கோணத்தில் அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கொல்லப்பட்ட சையத் பஸ்ரூதின் முந்தைய நடவடிக்க்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

தவிர, சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள்   ஆய்வு செய்தனர்.