சென்னை:

சென்னை வண்ணாரப் பேட்டையில் விரைவில் பாரம்பரிய தோட்டம் அமைக்கப்படவுள்ளது.
இந்த தோட்டத்தில் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மரங்கள் மற்றும் செடிகள் இடம்பெற உள்ளன.


வண்ணாரப்பேட்டையில் 5 ஏக்கர் நிலத்தில் ரூ.70 லட்சம் செலவில் பாரம்பரிய தோட்டம் அமையவுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் பாரம்பரிய தோட்டத்தை அமைக்க தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு ஏஜென்ஸி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த தோட்டத்தில் 100 வகையான மரங்கள்,செடிகள்,சிறு தோட்டம், உள் நீர்ப்பாசனம் ஆகியவை இடம்பெறும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, மக்கள் தொகை அதிகரிக்கும் போது கூடுதலான பூங்காக்கள் தேவைப்படுகிறது.

பாரம்பரிய தோட்டம் அமைக்கப்படும் போது, பழமையான மரங்கள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வழி ஏற்படும்.

தோட்டத்தை பராமரிக்க அருகில் உள்ள பகுதியில் இருந்து 40 பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற மரம்,செடிகளை இடம்பெறச் செய்யும் வகையில் திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமனாதபுரம் மற்றும் ஏற்காட்டில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன என்றனர்.

வடசென்னை பகுதியில் அமையவிருக்கும் பாரம்பரிய தோட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்கின்றனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.