டில்லி,

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கப்பல் வழி போக்குவரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக  கூறிய மத்திய அமைச்சர் இதற்காக முதல்கட்டமாக ரூ.20 கோடி மத்திய அரசு ஒதுக்க தயாராக உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை நான்குவழி சாலை திட்டத்திற்கு தமிழக அரசிடம் இருந்து சரியான வகையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அமைச்சர், கடல் வழி போக்குவரத்து திட்டத்திலும் தமிழக அரசு விரைவில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய மந்திரிசபை கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்கான திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.

மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலும் இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கும் திட்டங்கள் எடுத்துக்கொள்ளப் படாமலேயே இருந்தன.

ஆனால்ர, பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.  இதற்கான திட்ட மதிப்பீடு  ரூ.3,400 கோடி.  மாநில அரசு இந்த திட்டத்துக்கு வழங்க வேண்டிய நிதியை காலதாமதப்படுத்தியதால் திட்டங்களை செயல்படுத்து வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மீதமுள்ள தேவையை  மத்திய அரசு நிதியில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது என்றார்.

மேலும்,  வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையுள்ள 102 கி.மீ. தூரத்துக்கு இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,114 கோடியே 62 லட்சமும்,

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மற்றும் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரையிலுமான 86 கி.மீ. தூரத்துக்கு இரட்டைப்பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டத்துக்காக ரூ.1,552 கோடியே 94 லட்சமும் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்றொரு முக்கியமான திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை நான்குவழி சாலை திட்டம். ரூ.10 ஆயிரம் கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

ஆனால் தமிழக அரசிடம் இருந்து முழுமையாக ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த சாலை அமைந்தால் குறைந்தபட்சம் 60 சதவீத போக்குவரத்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக அமையும்.

மேலும்,  திருவனந்தபுரத்தில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு நீர்வழி போக்குவரத்து (கப்பல் போக்குவரத்து) நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முதல்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளார். இத்திட்டம் குறித்து ஏற்கனவே தமிழக அரசிடம் விவாதித்தாகிவிட்டது.

தமிழக அரச இந்த திட்டத்தில் இணைந்தவுடன் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் திட்டத்தை நிறைவேற்றிவிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.