சென்னை: லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் இடை நீக்கம்

சென்னை:

லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவலர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

சென்னை ஓட்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் பெருமாள். லாரி ஓட்டுநர். நேற்று இவர், சித்தாலப்பாக்கம் செக்போஸ்ட் அருகில் லாரி ஓட்டி வந்தபோது,, மடிப்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது லாரியை மறித்து ஓட்டுநரிடம் ரூ. 100 லஞ்சம் கேட்டிருக்கிறார்.

.

அவரிடம் வருவதற்கு முன்பே ஓட்டுநர் பெருமாளுடன் வரும் நபர் வீடியோ எடுக்கும் வகையில் செல்போனைத் தயாராக இயக்கி வைத்திருக்கிறார்.  இதை அறியாத போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன், பணத்தை வாங்குகிறார். 40 ரூபாயை பெருமாள் கொடுக்க, ‘இவ்வளவு குறைவாக கொடுக்கிறாயே.. உன் வண்டி இந்த எல்லையை விட்டே போகாது. 15 நாள் கழித்து வந்திருக்கிறேன். ரூ. 100 தராவிட்டால் லாரி போகாது” என்று மிரட்டுகிறார்.

மேலும், “ரூ.100 ரூபா கொடுக்காம நீ போகவே முடியாது. நீயும் மேடவாக்கம் நானும் மேடவாக்கம். பாஸ்கர் யாருன்னு போய் கேட்டுப்பாரு’ என்று மிரட்டலாக  சொல்கிறார்.

அந்த நேரத்தில் வேறு ஒரு வாகனம் கடந்து சென்று விடுகிறது. ‘உன்னால் ஒரு வண்டிய விட்டுட்டேன், நூறு ரூபா போச்சு’ என்கிறார் பாஸ்கரன்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் செல்போன் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி அன்று நடந்திருக்கிறது. அந்த வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் பரவி, வைரலாகி வருகிறது.

இதையடுத்து  லாரி ஓட்டுநர் பெருமாளிடம்  புகாரைப் பெற்று போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாஸ்கரை சஸ்பெண்ட் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கரத்தில் சென்ற தம்பதியை காவலர் துரத்திச் சென்றதில் அவர்கள் கீழே விழ, பெண் மரணமடைந்தார். அதே போல சென்னை தி.நகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞரையும் அவரது தாயாரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மனித உரிமை அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்த நிலையிலும் போக்குவரத்து காவலர்கள் தங்கள் மாமூல் விசயத்தில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுவது காவலர்கள் மீது மரியாதையின்மையை அதிகரித்துள்ளது.