சென்னை நீர் பஞ்சம் : மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஆய்வு செய்யும் அரசு

சென்னை

மூன்று மாதமாக தண்ணீருக்கு தவித்து வரும் சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை நகரில் தற்போது மக்கள் தண்ணீர்  பஞ்சத்தால் தவித்து வருகின்றனர்.   சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய தமிழக அரசால் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமுலாக்கப்பட்டது.     ஆரம்பத்தில் இது மிகவும் தீவிரமாக இருந்த நிலையில்  ஆட்சி மாறியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டது.   அதன் பிறகு மீண்டும் ஆட்சி மாறியும் அந்த திட்டத்துக்கு யாரும் உயிரளிக்கவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக சென்னை மாநகரம் தண்ணீர் இல்லாமல் துயருற்று வருகிறது.   இந்நிலையில் சென்னை மாநகராட்சியும் மாநகர குடிநீர் வாரியமும் இணைந்து மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு நடத்த உள்ளன.   இந்த ஆய்வை நேற்று அடையாறு ரஞ்சித் தெருவில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், “சென்னையில் அரசு அலுவலகங்கள் உட்பட சுமார் 12.5 லட்சம் கட்டிடங்கள் உள்ளன.   இவற்றில் குறைந்தது 2 லட்சம் கட்டிடங்களில் அக்டோபர் மாதத்துக்குள் அதாவது மழைக்காலம் தொடங்கும் முன்பு மழைநீர் சேகரிப்பு திட்டம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.   இதற்காக 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   அந்த குழுக்கள் 1000 சதுர அடிக்கு மேல் பரப்புள்ள கட்டிடங்களை கண்டறிந்து அங்கு மழை நீர் சேமிப்பு திட்டம் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு பகுதியிலும் சமுதாய கிணறுகள் உருவாக்கப்பட்டு அந்த கிணற்றில் அப்பகுதியில் சேமிக்கப்படும் மழைநீரை சேகரிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  ஒரு வருடத்தில் சராசரியாக இந்தியாவில் 700 மிமீ மழை பெய்கிறது.  உலக சராசரி மழை அளவு 300 மிமீ ஆகும்.  எனவே நமது நாட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக ஆனால் தண்ணீர்பஞ்சம் தீர்ந்து விடும்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மற்றொரு அதிகாரி, “ மழை நீர் சேகரிப்பு என்பது கட்டாயமானாலும் தற்போது அவ்வாறு அமைக்காதோர் மீது எவ்வித அபராதமும் விதிக்கப்பட போவதில்லை.  மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எதிர்காலத்தில் நீர் பஞ்சம் இல்லாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.  விரைவில் நீர் நிலைமை சீரடையும்” என தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published.