எட்டு மாதங்கள் ஒரு பெண்ணுக்கு கர்ப்பகாலத்துக்குரிய சிகிச்சைகளை செய்துவிட்டு அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பெல்லாம் முடிந்தவுடன் உன் வயிற்றில் இருப்பது குழந்தையல்ல கட்டி என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

pregnant

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஹசீனா பேகம் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் தனக்கு குழந்தையில்லாத கவலையில் வாடி வந்திருக்கிறார். இந்நிலையில் அவருக்கு மாதவிலக்கு தள்ளிப்போகவே சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய, அவர் கருவுற்று இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தனது 7 ஆண்டுகால துயரம் தீர்ந்தது என்று மகிழ்ச்சியடைந்த ஹசீனாவும் அவர் குடும்பத்தினரும் இந்த சந்தோஷத்தை கொண்டாடியிருகிறார்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரெகுலராக பரிசோதனைக்கு வந்திருக்கிறார் ஹசீனா. அவருக்கு குழந்தை பிறக்கும் தேதியையும் ( Estimated Date of Delivery) மருத்துவர்கள் குறித்து கொடுத்திருக்கின்றனர். அதன்படி நவம்பர் 18-ஆம் தேதி தன் கையில் தனது குழந்தை தவழும் என்ற கனவில் இருந்திருக்கிறார் ஹசீனா.
இச்சுழலில் அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒன்றுகூடி அவருக்கு வளைகாப்பு விருந்தெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு குழப்பம் என்னவென்றால் பலமுறை மருத்துவமனைக்கு அவர் சென்றபின்னரும் அவர் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை. ஆனால் ஹசீனாவோ தாம் பலமுறை ஸ்கேன் எடுத்ததாக கூறுகிறார்.
கடைசியாக மருத்துவர்கள் எட்டு மாதங்கள் கழித்து “உன் வயிற்றில் இருப்பது குழந்தையல்ல கட்டி என்று சொல்லி கையை விரித்திருக்கிறார்கள்” அதிர்ச்சியில் உறைந்தார் ஹசீனா, கடும் கோபமடைந்த அவர் குடும்பத்தினர் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் உறவினர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது “நோயாளி ஸ்கேன் எடுப்பதை ஒவ்வொரு முறையும் தவிர்த்திருக்கிறார் இதுதான் இந்த குழப்பத்துக்கு அடிப்படை காரணமாகும். அதிக கூட்ட நெரிசல் காரணமாக மருத்துவர்களும் அவர் ஸ்கேன் எடுத்தாரா இல்லையா என்பதை பரிசோதிக்க இயலவில்லை. இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 600 பிரசவங்கள் வெற்றிகரமாக நடக்கின்றன. இதுபோல அரிதிலும் அரிதான விதத்தில் சில தவறுகள் நடந்துவிடுவதும் உண்டு என்று தெரிவித்தனர்.
மேலும், ஹசீனாவுக்கு ஏற்கனவே பி.சி.ஓ.எஸ். பாதிப்பு (Poly-Cystic Ovary Disorder) இருந்துள்ளது. அவரது வயிற்றிலிருந்து ஒரு கட்டி கடந்த ஜனவரியன்று அகற்றப்பட்டது எனவே அது அவரது மாதவிலக்கை நிறுத்தியிருக்கலாம். இதை அவர் தாம் கருவுற்றதாக நம்பிவிட்டார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவர்கள் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தவும், ஹசீனாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் (அவர் குழந்தை என்று நம்பிய) கட்டியை அகற்றவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.