புளூவேல் விளையாட்டு : சென்னை மாணவி தற்கொலை முயற்சி

சென்னை

புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஒரு மாணவி சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உலகின் அதி பயங்கரமான விளையாட்டு என சொல்லப்படும் புளூவேல் கேம் பல உயிர்களை பலி வாங்கி வருகிறது.  (புளூவேல் என்றால் நீலத் திமிங்கலம் என பொருள்)  இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் அதற்கு அடிமையாகி அதில் சொல்லப்பட்டவைகளை செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.    பல அபாயமான செயல்களை செய்யச் சொல்லி அந்த விளையாட்டில் கட்டளைகள் வருகின்றன.   அதைச் செய்ததால் பலர் உயிர் இழந்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் நிவேதா (வயது 24) என்னும் மாணவி கம்ப்யூட்டரில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தன் பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.   அவர் இந்த புளூவேல் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகிறார்.   கடந்த சில நாட்களாகவே ஒரு குழம்பிய மனநிலையில் நடமாடிக்கொண்டிருந்த நிவேதாவை அக்கம் பக்கத்தினர் கவனித்து அந்த விளையாட்டை நிறுத்தும்படி அறிவுரை கூறி உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு தனது அடுக்கு மாடி குடியிருப்பின் ஏழாம் மாடியில் இருந்து நிவேதா குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  அதனால் அவருக்கு முதுகு எலும்பு முறிந்து ஆபத்தான நிலையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் இந்த ஆபத்தான விளையாட்டில் சொன்னபடி அவர் ஏழாம் மாடியில் இருந்து குதித்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் போலீசார், “நாங்கள் நிவேதாவை விசாரித்தோம்.   அவருக்கு நேர்ந்தது வெறும் விபத்து தான் என நிவேதா சொல்லி இருக்கிறார்.  எனவே இது புளூவேல் விளையாட்டின் விளைவு இல்லை” என கூறி உள்ளனர்.

ஒரு வாரம் முன்பு திருவனந்தபுரத்தில் இதே விளையாட்டை விளையாடிய ஒரு 16 வயது மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.   அந்த மாணவரின் தாயார்,  முதலில் இது ஏதோ மீன்கள் பற்றிய விளையாட்டு என அசட்டையாக இருந்து விட்டதாகவும்,  தனது மகனின் தற்கொலைக்குப் பிறகே இந்த விளையாட்டில் உள்ள அபாயங்களை அறிந்துக் கொண்டதாகவும் கூறினார்.