மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 பேரும் சிறையில் அடைப்பு

சென்னை:

சென்னையில் பரபரப்பு ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் வரும் 31ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள 300 பேர் வசித்து வரும்  பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர், தனது 12 வயது மாற்றுத்திறனாளி மகளை, அந்த குடியிருப்பில் வேலை செய்துவருபவர்கள்  கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் கொடுத்தார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் குறித்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்த கொடுஞ்செயலை முதலில் தொடங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  சக காவலாளிகள், லிப்ட் ஆபரேட்டர், தண்ணீர் கேன் போடுபவர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்பட 17 பேர் அந்த பெண்ணை கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

பல சமயங்களில் அந்த பெண்ணுக்கு மயங்கமருந்து கொடுத்தும் பலாத்காரம் செய்து வந்ததும், கடந்த 7 மாதமாக இந்த வன்செயல் நடைபெற்றுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரும் இன்று சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் வருகிற ஜூலை 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.