கொரோனா அச்சுறுத்தல் : சொந்த ஊரில் சொத்து முதலீட்டை மாற்றும் ’சென்னைவாசிகள்’

சென்னை

சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்யத்  தொடங்கி உள்ளனர்.

சென்னையில் வசிப்போரில் பெரும்பாலானோருக்குச் சென்னை சொந்த ஊர் கிடையாது என்பது நாம் அறிந்ததே.   பலரும் தங்கள் சொந்த ஊரைவிட்டுப் பணி அல்லது வர்த்தக நிமித்தமாகச் சென்னைக்கு வந்து தங்கள் ஊர் சென்னையாக மாற்றிக் கொண்டுள்ளனர்.   விழுதுகள் எவ்வளவு தூரம் சென்றாலும் வேர் மரத்தின் அடியில் இருக்கும் என்பதைப் போல் சொந்த ஊர்ப்பாசம் அனைவருக்கும் அடிமனதில் இருக்கும்.

அவ்வகையில் தற்போது சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் பலரும் இங்கிருந்து கிளம்பி சொந்த ஊர்களுக்கு இடம் மாறத் தொடங்கி உள்ளனர்.  பலர் தங்கள் சொந்த ஊர்களில் வீடுகளை வாங்கத் தொடங்கி உள்ளனர்.  கிராமங்களில் வசிப்போர் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரங்களான கோவை, மதுரை நெல்லை போன்ற நகரங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளனர்.

இது போல் சென்னை வாசிகளும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது ஊருக்குப் பக்கத்தில் உள்ள நகரங்களிலோ வீடுகள்,வில்லாக்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் வாங்குவது வெகு நாட்களாக உள்ளன.  ஆனால் தற்போது இது மிகவும் அதிகரித்துள்ளது.   கடந்த 2015 இல் மதுரை நகரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களுக்கு இருந்த கிராக்கியைப் போல் தற்போது பன்மடங்கு பெருகி உள்ளதாக நகரின் பிரபல கட்டுமான அதிபர் தெரிவிக்கிறார்.

கடந்த 2015 ஆம் வருடம் வெள்ளம் வந்தபோது சென்னைக்கு வெளியில் இவ்வாறு வீடுகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதால் அவர் இவ்வாறு கூறுகிறார்.  கோவை போன்ற நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் விற்பனை அதிகரித்து வருகையில் மதுரை மற்றும் நெல்லை போன்ற நகரங்களில் வில்லாக்கள் அதிகரித்து வருகின்றன.

சென்னையில் வீடுகளின் விலை மிகவும் அதிகரித்து வருவதால் இங்கு வாங்குவோர் குறைந்த நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு வாங்குவோர் சதவிகிதத்தை முழுவதுமாக குறைத்துள்ளதாகப் பல கட்டுமான அதிபர்கள் கூறுகின்றனர்.  தற்போது சென்னைக்கு மாற்றாக வீடு விற்பனையில் வளர்ந்து வரும் நகரங்களில் கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகங்கள் முன்னணியில் உள்ளன.

கார்ட்டூன் கேலரி