மியூசிக் மூலம் மாணவர்களின் மனநிலையை மாற்றும் மாநில கல்லூரி!

சென்னை:

மாணவர்களிடையே வளர்ந்து வரும் ரவுடி கலாச்சாரத்தை ஒழிக்கும் வகையில், மாணவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை ஊக்கு விக்கும் வகையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள பிரசிடென்சி காலெஜ் எனப்படும் மாநில கல்லூரி நிர்வாகம், மியூசிக் கிளப்பை தொடங்கி உள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

மாநிலக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த மியூசிக் கிளப்பை தொடங்கி உள்ளனர். இதை பிரபல இசை அமைப்பாளர் தினா தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், தற்போது படித்து வரும் மாணவர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சமீபத்தில் சென்னை பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்களின் அரிவாள் கலாச்சரம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், மாணவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை காவல்துறையும், கல்லூரி நிர்வாகங்களும் எடுத்து வருகின்றன.

அப்போது மாணவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மாணவர்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி குறித்து கேட்டபோது, பெரும்பாலான மாணவர்கள் இசையை விரும்புவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை  மாநிலக்கல்லூரியில் மியூசிக் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.  மாணவர் களிடையே பரவி வரும்  ரவுடிசத்தைத் தடுப்பதற்கும் அவர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்து வதற்கும், திறமையை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக மியூசிக் கிளப் தொடங்கப்பட்டு உள்ளதாக மாநிலக்ககல்லுரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், தங்களது மாணவர்களுக்கு இயற்கையாகவே இசை ஞானம் உள்ளது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், கல்லூரியில் மியூசிக் கிளப் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், இதன்மூலம் மாணவர்களிடையே பாட்டுப்போட்டி, இசைப்போட்டி என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசாக இசைக் கருவிகள் வழங்கப்படும், மேலும் இசையில் பங்கேற்க ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

மாநிலக் கல்லூரி நிர்வாகத்தின் இந்த வித்தியாசமான நடவடிக்கை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.