திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு முதல்வர் கொடுத்த செக் பவுன்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் உருவான தமிழ்த் திரைப் படங்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மானியத் தொகைக்கான செக் பவுன்ஸ் ஆகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் உருவான தமிழ்த் திரைப் படங்களுக்கு தமிழக அரசு  மானியத் தொகை அளித்து வருகிறது.  அதன்படி 2007, 2008,  2009, 2010, 2011, 2012, 2013, 2014 – என்று மொத்தம் எட்டு  வருடங்களில்  வெளியான 149 படங்களுக்கு மானியம் அளிக்கலாம்  என தமிழக அரசு அறிவித்தது.  இப்படங்களுக்கு தலா 7 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

இப்படி தமிழக அரசு குறிப்பிட்ட   `பள்ளிக்கூடம்’, ` நினைத்தாலே’, `குப்பி’ படங்களைத் தயாரித்த விஸ்வாஸ் சுந்தர், ‘வெளுத்துக்கட்டு’ பட  தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘அய்யா வழி’ தயாரிப்பாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், ‘தனம்’ திரைப்படத் தயாரிப்பாளர் கெளசல்யா, ‘சூர்யா’ பட  தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், ‘ஆட்டநாயகன்’ படத் தயாரிப்பாளர் கே.முரளிதரன், ‘அவள் பெயர் தமிழரசி’ படத் தயாரிப்பாளர் வி.எம்.லலிதா, ‘அம்மான்னா சும்மா இல்லடா’ தயாரிப்பாளர் கோவிந்தன், ‘நம்ம கிராமம்’ தயாரிப்பாளர் மோகன் சர்மா, ‘மலரினும் மெல்லிய’ படத்  தயாரிப்பாளர்  ராஜ மனோகரன் என்று மொத்தம் 10  தயாரிப்பாளர்களுக்கு மட்டும் கடந்த 21-ம் தேதி  கோட்டையில்  மானியத் தொகையாகத் தலா 7 லட்சத்துக்கான காசோலையைக் அளித்தார்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இவை தவிர மீதமுள்ள 137 படங்களுக்கான மானியத்தை தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருக்கும் செய்தி ஒளிபரப்புத்துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும்படி அந்தந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த காசோலை ரிசர்வ் பேங்க ஆஃப் இந்தியா வங்கியைச் சேர்ந்தது. காசோலையில் தமிழக அரசு சார்பாக எஸ்.குமரேசன் கையெழுத்திட்டிருந்தார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் இந்த காசோலைகளை நேற்று வங்கியில் செலுத்தினர். ஆனால், செக் பவுன்ஸானதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால்  தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு சார்பில் கொடுக்கப்பட்ட காசோலைகளே பவுன்ஸ் ஆனது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.