சட்டீஸ்கர்: காங்கிரஸ் கோட்டையை தகர்க்க ஐஏஎஸ் அதிகாரியை களம் இறக்கும் பாஜக

ராய்ப்பூர்:

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் கலெக்டராக இருந்தவர் ஓம் பிரகாஷ் சவுத்ரி. இளம் ஐஏஎஸ் அதிகாரியான இவர் 2005ம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர். இவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 23 ஆண்டு பணி காலம் இருக்கும்போது இவர் ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சட்டீஸ்கரில் கார்சியா தொகுதியில் ஒம் பிரகாஷ் சவுத்ரியை களம் இறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ராய்கார் மாவட்டத்தில் 1977ம் ஆண்டு நடந்த தொகுதி சீரமைப்புக்கு பின்னர் கார்சியா தொகுதி உருவானது. அப்போது முதல் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது.

ஜனதா கட்சி மற்றும் பாஜக அலை வீசிய காலக்கட்டங்களில் கூட இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக வலுவான வேட்பாளர்களை களமிறக்கியும் இந்த தொகுதியில் காங்கிரஸை வீழ்த்த முடியவில்லை. 2013ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் எம்எல்ஏ நந்தகுமார் படேலின் மகன் உமேஷ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ராஜினாமா செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஓம் பிரகாஷ் சவுத்ரி பார்சியா தொகுதிக்கு உட்பட்ட பயாங் கிராமத்தை சேர்ந்தவர். அரசியலில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அகர்யா சமுகத்தை சேர்ந்தவர். மறைந்த இவரது சகோதரி பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை சவுத்ரி நடத்தி வருகிறார். இந்த தொண்டு நிறுவனம் அந்த பகுதியில் அதிக மக்களோடு தொடர்பு கொண்டு தீவிர பணியாற்றி வருகிறது.

மத்தியபிரதேசத்தில் இருந்து பிரிந்த 2000ம் ஆண்டுக்கு பின்னர் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து தேர்வு பெற்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி இவர். சவுத்ரி கல்வி துறையில் அதிக கவனம் செலுத்தினார். மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள தண்டேவாடா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது தண்டேவாடா கல்வி நகரத்தை உருவாக்கினார். இதற்காக இவர் 2013ம் ஆண்டு பிரதமர் விருதை பெற்றுள்ளார். இதேபோல் ராய்ப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்.

சட்டீஸ்கரில் எப்போதும் பாஜக&காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும். அதனால் அனைத்து தொகுதிகளும் பதற்றமானதாகவே இருக்கும். இந்த மாநிலத்தின் முதல் முதலமைச்சரான அஜித்ஜோகியும் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறினார். இந்த வரிசையில் தற்போது சவுத்ரியும் அரசியல்வாதியாக மாறியுள்ளார். இவரை போல் ஏற்கனவே ராய்ப்பூர் கலெக்டராக இருந்த அர்ஜூன் சிங், இந்தூர் கலெக்டராக இருந்த ராஜீவ்காந்தி ஆகியோர் ராஜ்யசபாவில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் சவுத்ரி தற்போது கார்சியா தொகுதி வெற்றியை பாஜக.வுக்கு பறித்து தருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.