ராய்பூர்: கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீதியோர காய்கறி கடைகளில் அனைத்து பொருட்களும் சரியான விலையில் விற்பனையாகிறதா என்று அதிரடியாக ஆய்வு நடத்தி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல்.

சீனாவில் தோன்றி 200க்கும் மேற்பட்ட நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

அனைத்து மாநில முதலமைச்சர்களும் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். அதிகாரிகள், அமைச்சர்களுடன் விவாதிக்கின்றனர். கடுமையான உத்தரவை பிறப்பிக்கின்றனர்.

ஆனால் மற்ற முதலமைச்சர்களை விட வித்தியாசமாக களப்பணியாற்றி வருகிறார் சத்தீஸ்கர். வீடியோ காலில் மாநில நிலவரங்களை பற்றி தெரிந்து கொள்ளாமல் நேரடியாக களத்தில் இறங்கி உள்ளார்.

பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காய்கறி கடைகளுக்கு அவர், நாள்தோறும் செல்கிறார். காய்கறிகளின் இருப்பு, என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கேட்டறிகிறார். அவரின் இந்த செயல்பாடுகளுக்கு பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.