ராய்ப்பூர் :

நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் மின்சார திருத்த மசோதாவை முன்மொழிந்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல்.

நாடு முன் எப்போதும் சந்தித்திராத ஒரு பிரச்சனையில், அரசின் அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் செயல் பட்டுக்கொண்டிருக்க, எதிர்ப்பை தவிர்ப்பதற்காகவே இந்த நேரத்தை தேர்ந்தெடுத்திருப்பதாக நிபுணர்களும், ஊழியர் சங்கங்களும் குற்றம் சாட்டுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

மின்சார திருத்த மசோதா (2020) குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கும் அவர், வருமான அடிப்படையில் மக்களை வகைப்படுத்தினால் பெரும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகத்தில், மக்கள் செலவு செய்யும் தகுதி அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, உற்பத்தி செலவை வைத்து கட்டண நிர்ணயம் செய்வது பலன் தராது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு புவியியல் வளங்களைக் கொண்டுள்ளன. தேசத்தின் நலனுக்காகவே வளங்கள் மிகவும் திறமையாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரே கொள்கையை மற்றும் ஒரு குறித்த சதவீதத்தை கட்டணமாக அறிவிப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.

முன்மொழியப்பட்ட மின்சார திருத்த மசோதாவில், புதுப்பிக்கத்தக்க மற்றும் நீர் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கி பரிந்துரைக்கிறது, அதை மாநில ஆணையங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மின்சார திருத்த மசோதா (2020) நாடு மிக மோசமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த சட்ட திருத்தம் முன்மொழியப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. ஆகையால், நாடு சுமூக நிலைக்கு திரும்பியபின், அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசித்து புதிய வரைவு மசோதாவை கொண்டுவரவேண்டும் அதுவரை இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் கேட்டுக்கொண்டுள்ளார்.