ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில்   தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் குவியும் கொரோனா சடலங்களை எடுத்துச் செல்ல போதிய வாகன வசதி இல்லாபததால்,  குப்பை வண்டியில் எடுத்துச்செல்லும் பரிதாபம் நிகழ்ந்து வருகிறது. அது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பாதிப்பின் அளவு இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி திருவிழாவை நடத்தி தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா  பரவல் தீவிரமடைந்து உள்ளதால், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் புதிதாக 14,250 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,86,244 ஆக அதிகரித்துள்ளது. தினசரி 120 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 5,307ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த நோயாளிகளை அதற்குரிய வாகனம் மூலம் எடூத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், சடலங்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள காட்சிகளில், பிபிஇ பாதுகாப்பு உடைகள் அணிந்துள்ள மாநகராட்சி ஊழியர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை மயானம் வரை குப்பை அள்ளும் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது மக்களிடையே சோகத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளன.