சத்திஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு! ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு

டில்லி:

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள,சத்திஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களிலும், காங்கிரஸ் முதல்வர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

சத்திஸ்கரில் பூபேஷ் பாகெல், மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வர் சச்சின் பைலட்டும் பதவி ஏற்கின்றனர்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக படுதோல்வி அமைந்தது.  மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ரிரிய சமிதி கட்சியும், மிசோரமில் எம்என்எப் என்ற மாநில கட்சியும் ஆட்சி அமைத்துள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து 3 மாநிலங்களில் முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பட்டுள்ள நிலையில், இன்று பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட மூத்த அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர்  கலந்து கொள்ள உள்ளனர். அதற்கு தகுந்தாற் போல் பதவியேற்பு நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: காலை 10 மணி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் காலை 10 மணியளவில் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் பதவியேற்க உள்ளனர். மாநில ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

மத்திய பிரதேசம்: மதியம் 1.30 மணி

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக கமல்நாத் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் பதவி ஏற்க உள்ளார்.  தலைநகர்  போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கமல்நாத்துக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

சத்திஸ்கர் : மலை 4.30 மணி

சட்திஸ்கரில் பூபேஷ் பாகேல், இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். ராய்ப்பூரில்  அவரது பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.  மாநில ஆளுநர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.