ரெய்ப்பூர்:

போலீசாரின் அத்துமீறல், மலைவாழ் மக்களை கைது செய்தது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையிலும், பத்திரிக்கையாளர்கள் கைது  குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அப்டாப் ஆலம் தலைமையிலும் சத்தீஸ்கர் அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

குடியரசு தினத்தன்று உரையாற்றிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூ பேஸ் பாகே, மாநிலத்தில் கடந்த ஆட்சி காலத்தில் பேச்சுரிமை கேள்விக்குறியாகி உள்ளது என்றும், பத்திரிகையாளர்களையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க சட்டம் இயற்றப்படும் என்றும் கூறினார்.

சத்தீஸ்கரில் மலைவாழ் மக்களும், பத்திரிக்கையாளர்களும் மாவோயிஸ்டுகள் என்று கூறி தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மலைவாழ் மக்களில் பலரை நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டது.

இந்த இரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவே தனித் தனியே விசாரணை ஆணையம் அமைத்து சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் தலைறையிலான ஆணையம், தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் , கைது செய்யப்பட்ட மலைவாழ் மக்களை விடுதலை செய்வது குறித்து பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், அவர்கள் பாதுகாப்புக்காக சட்டம் இயற்றுவது குறித்தும்  ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அப்டாப் ஆலம் தலைமையிலான ஆணையம் விசாரிக்கும் என சத்தீஸ்கர் அரசு அறிவித்துள்ளது.