டெல்லி: விடியற்காலை 4 மணிக்கு ஜனாதிபதியை கையெழுத்து போடச் சொல்வது வருந்தத்தக்கது என்று மகாராஷ்டிரா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து கூறி இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். அவரது காவல் வரும் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை அவ்வப்பொழுது டுவிட்டர் மூலம் கருத்துகளாக பதிவிட்டுள்ளார். தற்போது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து டுவிட்டர் ஒன்றில், அவர் கூறியிருப்பதாவது: ஆளுநர், பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகிய மூவருமே மகாராஷ்டிரா அரசியலின் நள்ளிரவு நாடகத்துக்கு பொறுப்பு.

இதில், ஜனாதிபதியும் சேர்ந்திருப்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. அதுவும் அதிகாலை 4 மணிக்கு அவரை எழுப்பி கையெழுத்து கேட்பது ஏற்கமுடியாது என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு பதிவில் ப. சிதம்பரம் கூறி இருப்பதாவது: ஜனாதிபதி மாளிகையில், அதிகாலை 4 மணிக்கு ஜனாதிபதியை எழுப்பி குடியரசுத் தலைவர் ஆட்சியை திரும்ப பெற கையெழுத்து கேட்பதா? அந்த கையெழுத்தை காலை 9 மணி வரை காத்திருந்து பெறமுடியாதா? என்றும் காட்டமாக கூறி இருக்கிறார்.